என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். உங்களை நானும், என்னை நீங்களும் நினைக்காத நாளில்லை. அவ்வளவு ஏன்? நினைக்காத நிமிடம்கூட இல்லை. ஏனெனில், நம்முடைய இந்த உறவானது தூய்மையான குடும்ப உறவு. அந்த உணர்வின் அடிப்படையில்தான் இந்தக் கடிதம். அதுவும் முதல் கடிதம். தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இன்னமும் முழுமை பெறாத அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிரந்தரமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். அதை. அரசியல் ரீதியாக சட்டப்பூர்வமாக உறுதியாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இதுதான். என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல், கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும் ஒரு லட்சியக் கனல். இன்று. நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்டுத் திடல் பணிகளுக்கான தொடக்கம். ஆனால், நம் அரசியல் களப் பணிகளுக்கான கால்கோள் விழா என்பதும் இதில் உள்ளர்த்தமாக உறைந்து கிடக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நம் மாநாடு எதற்காக என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே? நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கைப் பிரகடன மாநாடு. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், இது நம்முடைய கொள்கைத் திருவிழா. அதுவும் வெற்றிக் கொள்கைத் திருவிழா. இப்படிச் சொல்லும்போதே, ஓர் எழுச்சி உணர்வு. நம் நெஞ்சில் தொற்றிக்கொள்கிறது. இது, தன் தாய்மண்ணை நிஜமாக நேசிக்கும் அனைவருக்கும் இயல்பாக நிகழ்வதுதான்.
இந்த வேளையில், ஒன்றே ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதை நாம் எப்போதும் ஆழமாக மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான குடிமகனைத்தான் (Citizen) நாடு மதிக்கும். அதிலும் முன்னுதாரணமாகத் (Role model) திகழும் மனிதனைத்தான் மக்கள் போற்றுவர். ஆகவே, நம் கழகத்தினர் இம்மூன்றாகவும் இருக்க வேண்டும் என்பதே என் பெருவிருப்பம். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும். நாம் உணர வைக்க வேண்டும். நம் கழகம், மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்கப் பெரும்படை. இளஞ்சிங்கப் படை. சிங்கப் பெண்கள் படை. குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை. ஆகவே, நம்மிடம் உற்சாகம் இருக்கலாம். கொண்டாட்டம் இருக்கலாம். குதூகலம் இருக்கலாம். ஆனால், படையணியினர் ஓரிடத்தில் கூடினால், அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதையும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில் அதீத விருப்பம் கொண்டவர்களாகச் சிலர் இருக்கின்றனர்
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது.
மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களும் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நம் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பதும் எனக்குத் தெரியும்.
அரசியலை, வெற்றி-தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல், ஆழமான அக உணர்வாகவும். கொள்கைக் கொண்டாட்டமாகவும் அணுகப் போகும் நம்முடைய அந்தத் தருணங்கள், மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும்.
அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி.
மாநாட்டுக் களப்பணிகளில் மட்டுமல்லாமல், நம் ஒட்டுமொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப் போகும் அந்தத் தருணங்களுக்காகவே, என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது. இதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியும்.
இந்த நெகிழ்வான நேரத்தில், முக்கியமான ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன்.
கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள். முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர்.
அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது.
ஆனால், எல்லாவற்றையும்விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம்.
மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம், அவர்களுக்கு உடல்ரீதியாகச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்றே அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, தங்கள் வீடுகளில் இருந்தே நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
மாநாட்டுக்கு வருகின்ற மற்ற அனைவரும், மாநாட்டுக்கு வந்து செல்லும்போது, பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம். அதேபோல, பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும். அரசியலுக்கும் அது பொருந்தும்.
நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வி.சாலை என்னும் விவேக சாலையில் சந்திப்போம்.
வெற்றி நிச்சயம்.
தோழமையுடன்,
விஜய்
தமிழக வெற்றிக் கழகம்
தலைவர்